1.என் நெஞ்சமே நீ மோட்சத்தை
விரும்பித் தேடி கர்த்தரை
வணக்கத்துடனே
துதித்துப் பாடி என்றைக்கும்
புகழ்ந்து போற்று நித்தமும்
மகிழ்ச்சியாகவே.
2. நட்சத்திரங்கள், சந்திரன்,
வெம் காந்தி வீசும் சூரியன்,
ஆகாச சேனைகள்,
மின் மேகம் காற்று மாரியே,
வானங்களின் வானங்களே,
ஒன்றாகப் பாடுங்கள்.
3. விஸ்தாரமான பூமியே,
நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,
யெகோவா நல்லவர்
சராசரங்கள் அனைத்தும்
அவர் சொற்படி நடக்கும்
அவரே ஆண்டவர்.
4. பரத்திலுள்ள சேனையே
புவியிலுள்ள மாந்தரே
வணங்க வாருங்கள்
யெகோவாதாம் தயாபரர்
எல்லாவற்றிற்கும் காரணர்
அவரைப் போற்றுங்கள்.