ஆறிரண்டு திங்கள் அருளளித்து – Aarirandu Thingal Aruliththu

ஆறிரண்டு திங்கள் அருளளித்து – Aarirandu Thingal Aruliththu

வெண்பா

ஆறிரண்டு திங்கள் அருளளித்துக் காப்பாற்றி,
சீறின நோய்விபத்தின் தீங்ககற்றி; -மாறிலான்
இன்புறு ஆண்டில் இரக்கமாய்ச் சேர்ந்ததற்கு
நன்றிதுதி சொல்லுவோம் நாம்.

பல்லவி

நன்றிதுதி இன்று சொல்லுவோமே. யேசு
நாதர் தயை ஓதிப் புகழ்வோமே

அனுபல்லவி

சென்ற ஆண்டீராறு மாதம் சேமமுடன் காத்து, நம்மை
வென்றியாய் நவவருடம் வேதனார் எமக் கீந்ததற்காக -நன்றி

சரணங்கள்

1.பஞ்சம் படையால் அனந்தம்பேர்கள் இந்தப்
பாரின் அஷ்டதிக்கில் மடிந்தார்கள்:
சஞ்சல் விபத்து கொள்ளைநோய்கள் -வந்து
சாவுக்குப் பலர் இரையானார்கள்;
தஞ்சமாய்ப் பரன் உதவி, சர்வ இக்கட்டும் விலக்கி,
அஞ்சமின்றி எம்மைக் காத்த அன்பிரக்கங்கள் மாபெரிதன்றோ? -நன்றி

2.ஒன்றான தேவனைக் கையெடாமல், ஒரே
உலக மீட்பர் யேசுவை நாடாமல்,
வென்று பாவம் துற்குணம் விடாமல், -நல்ல
விமலன் ஆவி ஒத்தாசை தேடாமல்,
பொன்றும் புவியோர்கள் கெட்டுப்போகிறார்; கடவுள் நம்மை
குன்றாத ஜீவன் பெறுவதற்குற்ற மெய்வேத வழியில் நடத்தினார் -நன்றி

3.மன்னர் துரைகள் மாறிப்போனாரே, -புவி
மந்திரி அமைச்சர் புதிதானாரே;
இந்நிலத்தை ஆண்ட பலகோனாரே -தேச
எல்லை அரசியல்கள் மாற்றினாரே;
தன்னிகரிலான் செங்கோலோ தாரணியிலே நிலைத்து,
மன்னுயிரை ரட்சை செய்து, மகத்துவ வீரமாய் ஆளுகின்றது -நன்றி

4.வந்த இந்த ஆண்டில் எம்மைக் காரும், -தயை
வள்ளலே! உம் மந்தையைக் கண்பாரும்;
எந்தத்தேசம் பாஷை நிறத்தோரும் உம்மை
இறைஞ்சவே பரிசுத்தாவி வாரும்;
நொந்த உம் சனத்தை ஆற்றி, நோய்த்த ஆடுகளைக் குணமாக்கி, நீர் சிந்தின திருரத்தத்தின் பலன் சிறந்து தோன்றிடச் செய்குவீர் என்றுமே. -நன்றி

5.கர்த்தன் இந்த ஆண்டில் வாறார் என்று விரி
காசினியின் நானாதிசை நின்று
மெத்தவும் தொனிக்குதார்ப்பு ஒன்று, அதன்
மெய்மை அறியோம், காரியம் நன்று;
துத்தியம் மிகும்பரனார் தோன்றும் நாளுக்காய் எல்லோரும்
நித்தியம் ஜெபதபத்தில் நிலைத்து, விழித்தே எதிர்பார்ப்போம். -நன்றி

Aarirandu Thingal Aruliththu song lyrics in english

Aarirandu Thingal Aruliththu